Published : 25 Jun 2021 08:26 PM
Last Updated : 25 Jun 2021 08:26 PM

தோப்பூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ஐசியூ பிரிவு: தீவிர நோயாளிகளும் சிகிச்சை பெறலாம்

மதுரை

தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதால், இங்கு விரைவில் ஐசியூ பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட தீவிர நோயாளிகளும் சிகிச்சை பெறலாம்.

மதுரை அருகே தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை முட்புதர்கள் நிறைந்து, பாழடைந்த கட்டிடங்களுடன் காட்டாஸ்பத்திரி என்று அழைக்கப்பட்டது. காசநோய், காலராவால் பாதிக்கப்படும் நோயாளிகளை உறவினர்கள் இந்த மருத்துவமனையில் சேர்த்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

காசநோய், முன்பு கரோனா தொற்றுநோயைப் போல அபாயகரமான நோயாகப் பார்க்கப்பட்டதால், அருகில் உள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையின் பக்கம் வரவே அஞ்சுவார்கள். மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கால் மதுரை உயர் நீதிமன்றம் இந்த மருத்துவமனையை மேம்படுத்த மருத்துவத்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் இந்த மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகரான சுகாதாரமான காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்ட வார்டுகள், நூலகம், விளையாட்டு அரங்கம், புல்வெளி தரைகள் உள்ளிட்ட நோயாளிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டது. மேலும், இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடைய கனிவான கவனிப்பு, காசநோயாளிகளை விரைவாக குணமடையச் செய்தது. அதனால், தமிழகம் முழுவதிலும் இருந்து தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்குக் காசநோயாளிகள் சிகிச்சை பெற வந்தனர்.

தற்போது கரோனா முதல் அலை, இரண்டாவது அலையில் இந்த மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் அடர்ந்த நிழல் தரம் மரங்கள் உள்ளன. சுகாதாரமான வார்டுகள், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலையில் மருத்துவமனையில் 250 படுக்கைகள் மட்டுமே இருந்தன. அதில், 150 படுக்கைகளில் மட்டுமே ஆக்சிஜன் இணைப்பு இருந்தது. அதனால், முதல்வர் ஸ்டாலின் இந்த மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளைத் தற்காலிகமாக ஏற்படுத்தி, கூடுதல் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், இந்த மருத்துவமனையில் 5 லிட்டர் முதல் 10 லிட்டர் கொள்ளவு உள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் மட்டுமே இருப்பதால் தீவிரமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. மிதமான கரோனா பாதிப்புள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டாலும் அதில் சிலருக்கு திடீரென்று நோய் தீவிரமடைந்துவிடும். அவர்களுக்கு உடனடியாக ஐசியூ வார்டுடன் கூடிய வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும். கூடுதல் உயர் அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்களும் தேவைப்படும். இவை இரண்டும் இங்கு இல்லாததால் நோய் தீவிரமடைந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு, 25 கி.மீ. தொலைவில் நகரின் மையத்தில் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவார்கள். ஆனால், அதற்குள் அந்த நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். சிலர் உடனடியாக வென்டிலேட்டர் சிகிச்சை கிடைக்காமல் இறந்தும் உள்ளனர்.

அதனால், தோப்பூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக வென்டிலேட்டர், உயர் அழுத்தம் கொண்டு ஆக்சிஜனுடன் கூடிய ஐசியூ வார்டு அமைக்கச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், ஐசியூ வார்டு அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான மயக்கவியல் மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுவதால் அவர்களையும் புதிதாகப் பணி நியமனம் செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாஜி மருத்துவமனையில் இருந்து தற்காலிகமாக நியமனம் செய்தால் கரோனா சிகிச்சைக்குப் பிறகு ஐசியூ வார்டு முடங்கும் அபாயமும் ஏற்படும். மேலும், தோப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளதால் கூடுதலாக 5 முதல் 10 ஆம்புலன்ஸ்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x