Published : 25 Jun 2021 08:02 PM
Last Updated : 25 Jun 2021 08:02 PM

பொதுப் போக்குவரத்து, ஜவுளி, நகைக் கடைகள் திறக்க அனுமதி: 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?- முழு விவரம்

சென்னை

ஊரடங்கு நீட்டிப்பில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வாக பொதுப் போக்குவரத்து, மாவட்டங்களிடையே பேருந்துப் போக்குவரத்து, நகை, ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றைத் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.

அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

* பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

* அனைத்துத் தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

*மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வகை - 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

* அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும்.

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இவை தவிர பொதுவான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x