

சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் பொது நுழைவுத் தேர்வுக்கான புதிய அனுமதி அட்டை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலையில் ராணுவப் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. திருவண்ணாமலை உட்பட 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பொது நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 25ஆம் தேதி, சென்னை பிரசிடென்சி கல்லூரியில் நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வுக்கான புதிய அனுமதி அட்டைகளை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் (தலைமையகம்) ஜூலை 1ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-2567 4924 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.