

சிவகங்கை அருகே அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் இடிந்து விழுந்ததால் ஆதிதிராவிடர்கள், கோயிலில் குடியேறினர்.
சிவகங்கை அருகே காடனேரி தெற்குத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயக் கூலிகளாக உள்ளனர். இதில் 25 குடும்பத்தினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது வீடுகள் பழுதடைந்து மேற்கூரைகள் அடிக்கடி இடிந்து விழுந்து வருகின்றன. இதுவரை 16 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. இரு தினங்களுக்கு முன்பு, சுப்ரமணி, மாரிமுத்து ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் சுப்ரமணி காயமடைந்தார். இதனால் அச்சமடைந்த ஆதிதிராவிடர்கள் அங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குடியேறியுள்ளனர். மேலும் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு வருகின்றனர். 50 குடும்பங்கள் உள்ள நிலையில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் உள்ளதால் ஒரே வீட்டில் 2 முதல் 3 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றன. இதையடுத்து 50 குடும்பங்களுக்கும் புதிதாக வீடு கட்டித் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் கூறுகையில், ''வீடுகளின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவது குறித்துக் கடந்த ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்தோம். எங்களது வீடுகள் முழுமையாகப் பழுதடைந்துவிட்டதால், அனைவருக்கும் புதிதாக வீடுகள் கட்டித் தருவதாகக் கூறினார். காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரும் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு நடவடிக்கை இல்லாத நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வீடு இடிந்ததில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் கோயிலில் குடியேறியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.