

மிசா சட்டத்தில் கைதாகி வாழ்வாதாரத்தை இழந்த போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, நெருக்கடி நிலைக்கால போராட்டக் குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புறவழிச்சாலையில் இந்திய நெருக்கடி நிலைக்கால போராட்டச் சங்கத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்தியாவில் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை ஏற்பட்டது. அப்போது, இதை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் மிசா சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். அதன் 46-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நெருக்கடி நிலைக்கால போராட்டச் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஓம்சக்தி பாபு கலந்துகொண்டு, பாரத மாதா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில், கலந்துகொண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு அம்மாநில அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதுடன், ஆண்டுதோறும் போராட்டக்காரர்கள் கவுரவிக்கப்பட்டும் வருகின்றனர்.
தமிழகத்தில் பல ஆயிரம் பேர் நெருக்கடி காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக் காலத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் மொழிப் போர் தியாகிகள் என அவர்கள் கவுரவிக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கட்சி சாரா போராட்டத்தில் பங்கேற்று, கை, கால்களை இழந்த மிசா போராட்டக்காரர்கள் பல்வேறு இன்னல்களைத் தற்போதும் சந்தித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்புகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு மற்ற மாநிலங்களில் வழங்கப்பட்டு வருவதைப் போல தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள போராட்டக்காரர்களைப் போராட்ட வீரர்கள் பட்டியலில் இணைத்து அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முன்வர வேண்டும்".
இவ்வாறு ஓம்சக்தி பாபு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ஆனந்தன், ஆர்எஸ்எஸ் அமைப்பு மாவட்டப் பொறுப்பாளர் ராஜவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.