Published : 25 Jun 2021 04:30 PM
Last Updated : 25 Jun 2021 04:30 PM

மக்கள்தொகை 50,000-க்கும் மேல் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

மக்கள்தொகை 50,000-க்கும் மேல் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பேரூராட்சிகள் ஆணையரகம் இன்று (ஜூன் 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பேரூராட்சிகளின் ஆணையரகம் மற்றும் அனைத்துப் பேரூராட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று எம்.ஆர்.சி. நகர், நகர நிர்வாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம், மூலதன மானிய நிதி, இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி, நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி- ஊரகக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு ஆகிய நிதி ஆதாரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கிராமப்புறங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளின் பொருட்களைச் சந்தைப்படுத்தும் வகையில் பேரூராட்சிப் பகுதிகளில் சந்தைகளை மேம்படுத்தவும், பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்க குடிநீர் ஆதாரம், குடிநீர் சேமிப்பு மற்றும் பகிர்மானக் குழாய்களை மேம்படுத்தவும், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் அனைவருக்குமான வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசின் நிதியுதவியோடு வீடு கட்டும் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

பேரூராட்சிகள் நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றைத் தூர்வாரவும், சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளைச் சரிசெய்யவும், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றும் கால்வாய்களைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை பருவமழைக் காலங்களுக்கு முன்னதாகவே மேற்கொண்டு தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், பேரூராட்சிப் பகுதிகளில் மழைநீரை முழுமையாகச் சேகரிக்கும் வண்ணம் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

அத்துடன், மழைநீர் சேகரிப்பு திட்டங்களை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உத்திகளைக் கொண்ட திட்டங்களை பேரூராட்சிப் பகுதிகளிலும் மேற்கொள்ளவும், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட குப்பை கொட்டும் வளாகங்களில் நிலம் மாசுபடுதலைத் தவிர்க்கும் பொருட்டு நீண்ட நாட்களாக தேங்கியுள்ள திடக்கழிவுகளை பயோ மைனிங் (Bio Mining) முறையில் அகழ்ந்தெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

அதேபோல், மக்கள்தொகை 50,000-க்கும் மேல் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தினைச் செயல்படுத்தவும், 50,000-க்கும் கீழுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தினைச் செயல்படுத்திட முழுமையான திட்டம் வகுக்கவும், ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்".

இவ்வாறு பேரூராட்சிகள் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x