புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்க மேடை அமைக்கும் பணி மும்முரம்: சட்டப்பேரவையில் தயாராகும் அறைகள்

ராஜ்நிவாஸ் வாயிலில் அமைச்சர்கள் பதவியேற்புக்காக அமைக்கப்படும் மேடை அமைக்கும் பணி. |  படங்கள்: எம்.சாம்ராஜ்.
ராஜ்நிவாஸ் வாயிலில் அமைச்சர்கள் பதவியேற்புக்காக அமைக்கப்படும் மேடை அமைக்கும் பணி. |  படங்கள்: எம்.சாம்ராஜ்.
Updated on
2 min read

தேர்தலில் வென்று 50 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் ஐந்து அமைச்சர்கள் வரும் 27-ம் தேதி மதியம் பதவியேற்புக்காக ஆளுநர் மாளிகை வெளியே மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. அதேபோல் அமைச்சராகவுள்ள ஐவருக்கு சட்டப்பேரவையில் அறைகள் தயாராகி வருகின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 2-ம் தேதி வெளியானது. அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. அதையடுத்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். பிறகு அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் குணமான பின்னும், அமைச்சர்கள் ஒதுக்கீட்டில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாஜகவுக்குப் பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள் ஒதுக்க முடிவு எட்டப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸில் 3 அமைச்சர்களுக்குப் பதவி கிடைக்கும்.

தேர்தலில் வென்று 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி அளித்தார். மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வந்த பிறகுதான் அமைச்சர்கள் பெயர் விவரம் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அமைச்சர்கள் பதவியேற்பை வரும் 27-ம் தேதி மதியம் 2.30 முதல் 3.15 மணிக்குள் நடத்த பாஜக தரப்பில் கோரிக்கை வைத்தனர். அதை முதல்வர் ஏற்றார். ஆளுநர் தமிழிசையும் அதை உறுதிப்படுத்தினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் வருகைக்காகத் தயாராகும் அறைகள்.
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் வருகைக்காகத் தயாராகும் அறைகள்.

இந்நிலையில் அமைச்சர்கள் பதவியேற்பை ராஜ்நிவாஸில் நடத்தப் போதிய இடம் இல்லாத சூழல் கரோனா காலத்தில் நிலவுவதால், ராஜ்நிவாஸ் வெளியே மேடை, பந்தல் போடும் பணி நடக்கிறது.

இதுபற்றி அரசுத் தரப்பில் விசாரித்தபோது, "ஒவ்வொரு அமைச்சருடன் 10 பேரும், கட்சியினர், அதிகாரிகள் என மொத்தம் 100 பேர் வரை பதவியேற்பில் பங்கேற்க உள்ளனர். இதற்காக கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு ராஜ்நிவாஸ் வாயிலில் பந்தல், மேடை அமைக்கிறோம்" என்றனர்.

அதே நேரத்தில் அமைச்சர்கள் பெயர் விவரம் இதுவரை அதிகாரபூர்வமாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்படவில்லை.

சட்டப்பேரவை தரப்பில் விசாரித்தபோது, "அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் முதல்வர் அறிவித்த பின்பு தெரியும். அதே நேரத்தில் அமைச்சர்களாக உள்ளதாகக் கருதப்படும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், பிரியங்கா, பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் தெரிவித்தபடி சட்டப்பேரவையில் அறைகள் ஒதுக்கப்பட்டு தூய்மைப் பணிகள் நடந்து வருகின்றன. அவர்களுக்கான கார்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. பதவியேற்பு முடிந்தவுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவர் அறையில் நல்ல நேரத்தில் இருக்கையில் அமர உள்ளனர்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in