

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு விசாரித்தது. அதன் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதித்து லோதா குழு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த வழக்கை விசாரித்த முதல் அமர்வு வரும் 14-ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி, இவ்வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, “இவ்வழக்கு விசாரணை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழக்கம்போல விசாரிக்கப்படும். மேலும் தள்ளிவைக்காமல் விசாரணை நடத்தப்படும். அதற்கு வசதியாக இவ்வழக்கின் எதிர்மனுதாரர்கள் பதில் மனுதாக்கல் செய்தல் உள்ளிட்ட நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.