மாங்கனித் திருவிழா முக்கிய நிகழ்வுகள் நிறைவு

படம்: காரைக்கால் அம்மையாரை எதிர்கொண்டு, அம்பாளுடன் காட்சிக் கொடுத்த சிவபெருமான்
படம்: காரைக்கால் அம்மையாரை எதிர்கொண்டு, அம்பாளுடன் காட்சிக் கொடுத்த சிவபெருமான்
Updated on
1 min read

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்றுடன்(ஜூன் 25) நிறைவடைந்தன.

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட, பல்வேறு சிறப்புகள் பெற்ற புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் இவ்விழா கடந்த ஆண்டை போலவே, நிகழாண்டும் கரோனா பரவல் சூழல் காரணமாக காரைக்கால் கைலாசநாதர் கோயில் வளாகத்துக்குள்ளேயே மிகவும் எளிமையான வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வுகளில் மட்டும் உரிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி கடந்த 21- ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் விழா தொடங்கியது. 22- ம் தேதி கைலாசநாதர் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நடைபெற்றது. 23-ம் தேதி பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

மாங்கனித் திருவிழாவின் மிகச் சிறப்புப் பெற்ற நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா, கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரகார உலாவாக நேற்று (ஜூன் 24) காலை நடைபெற்றது. அதன் பின்னர் அமுது படையல், பரமதத்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு ஆகியன நடத்தப்பட்டன.

சிவபெருமான் இருக்கும் கைலாய மலைக்கு காலால் நடந்து செல்லல் ஆகாது என்று புனிதவதி அம்மையார் பேய் உருவம் கொண்டு தலையால் நடந்து செல்லும் நிகழ்வும், பஞ்ச மூர்த்திகளுடன் சிவபெருமான் அம்மையாரை எதிர்கொண்டு காட்சிக் கொடுக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் இன்று அதிகாலை நடைபெற்றது.\

இதையடுத்து மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன. ஜூலை 23-ம் தேதி விடையாற்றி நிகழ்வுடன் விழா நிறைவடைந்ததாகக் கருதப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in