Published : 25 Jun 2021 12:42 PM
Last Updated : 25 Jun 2021 12:42 PM

பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் குறை கேட்பு மையம்: இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திறப்பு  

சென்னை

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் குறை கேட்பு (Call centre) சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு (Call centre) சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார்.

'இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 044- 2833 9999 என்ற எண்ணில் தொடர்புகொண்டு திருக்கோயில் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம். பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.

கோரிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதல் கோரிக்கைதாரர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். மேலும், கோரிக்கை நடவடிக்கை விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன், கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x