Published : 26 Mar 2014 11:37 AM
Last Updated : 26 Mar 2014 11:37 AM

மதுரையில் அழகிரி அணி உடைந்தது: கருணாநிதியுடன் எஸ்ஸார் கோபி சந்திப்பு

மு.க.அழகிரியின் வலதுகரமாக விளங்கிய எஸ்ஸார் கோபி, தனது ஆதரவாளர்களுடன் திடீரென திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து அழகிரி அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக் கப்படுவதாக செவ்வாய்க்கிழமை கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அதேநேரம், அழகிரியின் வலதுகரமாக விளங்கிய எஸ்ஸார் கோபி, தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

எஸ்ஸார் கோபியின் இந்த அதிரடி நடவடிக்கை, அழகிரி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருணாநிதியை சந்தித்தது குறித்து ‘தி இந்து’விடம் எஸ்ஸார் கோபி கூறியதாவது:

அழகிரியின் ஆதரவாளனாக அவருடன் பல ஆண்டுகளாக இருந்தேன். சமீபகாலமாக அவர் கட்சியை விமர்சித்து பேசுவதுடன், கட்சித் தலைவர் மனது புண்படும்படி தொடர்ந்து நடந்துகொள்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை.

இது குடும்பப் பிரச்சினைதான். சரியாகி விடும் என்று நினைத்திருந்தேன்.

வைகோவை ஆதரிப்பதா?

ஆனால் அவர் தொடர்ந்து கட்சியை விமர்சிப்பதும், தேர்தலில் திமுக தோற்கும் என்று கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. திமுகவை மிக மோசமாக விமர்சித்த வைகோவை சந்திப்பதும் அவருக்கு ஆதரவு தருவதும் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இப்போதைய நிலையில் எங்களுக்கு அழகிரியைவிட திமுகவும், தலைவரும், தளபதியும்தான் முக்கியம். என்னைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கருணாநிதியை சந்திக்க வருவார்கள்.

அழகிரியால்தான் வழக்குகளை சந்தித்தேன்

என் மீது பல வழக்குகள் இருப்பது உண்மைதான். யாரால் என் மீது வழக்கு வந்தது. அழகிரியுடன் இருந்ததால்தானே இத்தனை வழக்குகளையும் சந்தித்தேன். வழக்குகளிலிருந்து விடுபடத்தான் திமுக தலைமையுடன் இருக்கிறேன் என்று கூற முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு என் மீது 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் 100 வழக்குகள் போட்டாலும் கட்சியையும், தலைமையையும் விட்டுத் தர மாட்டேன்.

இவ்வாறு எஸ்ஸார் கோபி கூறினார்.

அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் பொட்டு சுரேஷும், எஸ்ஸார் கோபியும்தான். இதில் பொட்டு சுரேஷ், கடந்த ஆண்டு ஜனவரியில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, அழகிரிக்கு ஆல் இன் ஆல் ஆக இருந்தவர் எஸ்ஸார் கோபிதான். இப்போது அவரும் ஸ்டாலின் பக்கம் தாவிவிட்டார்.

தற்போது அழகிரியுடன் நெருக்கமாக இருக்கும் பலரும் எஸ்ஸார் கோபியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்தான். எனவே, அவர்களும் விரைவில் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாற வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அழகிரி அணி உடைந்துவிட்டதாகவே கூறப் படுகிறது.

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரியுடன் சேர்த்து விடுதலையானவர் எஸ்ஸார் கோபி. இவர் மீது பல்வேறு நில அபகரிப்பு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x