மத்திய அரசு கொண்டுவர உள்ள சிறு துறைமுகங்கள் தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மத்திய அரசு கொண்டுவர உள்ள சிறு துறைமுகங்கள் தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Updated on
1 min read

சிறு துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிறு துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல்செய்ய உள்ளது. அதுகுறித்து மத்திய கப்பல், துறைமுகங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 8 கடலோர மாநிலங்களின் பொதுப்பணித் துறை அமைச்சர்கள், 4 யூனியன் பிரதேச அரசுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 1908-ம் ஆண்டு இந்தியதுறைமுகங்கள் சட்டப்படி துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல், வரையறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது.

இந்நிலையில், இந்த வரைவு திருத்த மசோதா, மாநிலஅரசுகளிடம் இருந்து அதிகாரங்களை பறிக்கக் கூடியதாக உள்ளது. கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம் தற்போது ஆலோசனை அமைப்பாக உள்ளது. இந்தவரைவு விதிகள்படி இக்குழுமம் சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாக செயல்படஉள்ளது. மேலும், இக்குழுமத்தின் கூட்டமைப்பு மத்திய அரசின்அதிகாரிகளை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

இந்த வரைவின்படி பல அம்சங்களில் விதிகளை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் செல்லஉள்ளது. இதன் மூலம் மாநிலஅரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. மாநில கடல்சார் வாரியத்தின் ஆணைகள் மீதான மேல்முறையீடு தொடர்பான அதிகாரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது. இந்த வரைவில் மாநில அரசின் கவனத்துக்குரிய சில பகுதிகளின் மீது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, சரிபார்க்கப்பட்டு மாநில அரசின் குறிப்புரைகள் அனுப்பி வைக்கப்படும்.

இப்புதிய வரைவால் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் மொத்தமாக நீர்த்துப் போகக் கூடியதாக உள்ளது.

மேலும், கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமத்தை ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றுவதற்கும் இது வழிவகுக்கும்.

எனவே தமிழக அரசின் சார்பில் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த கூட்டத்தில், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை செயலர் தீரஜ்குமார், கடல்சார் வாரிய துணைத் தலைவர் கா.பாஸ்கரன், மாநில துறைமுக அலுவலர் மா.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in