

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும், ஊரடங்கில்தளர்வு காரணமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதாலும் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளும் முழு அளவில் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், நிலக்கரி வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் மின்உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய நிலக்கரி இல்லாததால், அனல்மின் நிலையத்தின் 1, 2, 3 மற்றும் 5-வது அலகுகள் நேற்றுமுன்தினம் மாலையில் நிறுத்தப்பட்டன. இதனால், 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது அலகு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
நிலக்கரி இன்று வந்தடையும்
சுமார் 68 ஆயிரம் டன் நிலக்கரி, கப்பல் மூலம் தூத்துக்குடி வந்து கொண்டிருக்கிறது. இன்று (ஜூன்25) அதிகாலைக்குள் இந்தக் கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்துவிடும். அதன் பின்னர் நிறுத்தப்பட்ட அலகுகள் இன்று இரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும். நாளை (ஜூன் 26) மேலும் ஒரு கப்பலில் சுமார் 55 ஆயிரம் டன் நிலக்கரி வருகிறது. இதுபோல், அடுத்தடுத்து நிலக்கரி வருவதால் தட்டுப்பாடு நீங்கி அனைத்து அலகுகளும் முழு அளவில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, முதல் உலையில் 1,000மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 485 மெகாவாட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.