

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு கடந்த 23 நாட்களில் 585 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனி பிரிவு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-ம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த 2 மாதங்களில் 3-ம் அலை தாக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கரோனா 3-ம் அலை குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 585 குழந்தைகள் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் 113 பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாகவும்,168 பேர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவும்,304 பேர் 11 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
கோவைக்கு அடுத்தபடியாக..
இந்நிலையில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு என தனிப்பிரிவு எதுவும் இல்லாததால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கரோனாவால் குழந்தைகள் நேரடியாக பாதிக்கப்படுவது இல்லை. குழந்தையின் தாய், தந்தை அல்லது வீட்டில் இருப்போர் மூலமாகவே நோய் தொற்றுகிறது. கரோனா தொற்றின் 3-வது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, கரோனா தொற்றுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட வேண்டும்.
இதில் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன், வென்டிலேட்டர் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதுதவிர குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்து குழந்தைகள் நலப் பிரிவு டாக்டர்களிடம் கேட்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றனர்.