Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை ஆட்சியர் ஆய்வு: விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடி செலவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொண்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவுநீர் உந்து நிலையங்கள், நாள் ஒன்றுக்கு 4.02 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம்,பேரூராட்சி பகுதியில் 23.49 கிமீ நீளத்துக்கு பாதாள சாக்கடை குழாய் புதைக்கும் பணிகள், 861 சாக்கடை புழை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், குழாய் புதைக்கும் பணிகள் உட்பட 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளுக்கான கால அளவுகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், கழிவுநீர் உந்து நிலையங்களை பார்வையிட்டு கட்டுமானப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முனிபாபு, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x