

மதுரை எய்ம்ஸ் அமையும் இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை செய்வதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரி வித்துள்ளார்.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அருகில் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந் தும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறை பரிசீலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பற்றி ஆர்டிஐ தகவல்களைப் பெற்று வரும் சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டி ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு தெற்கு ரயில்வே மூத்த போக்குவரத்து மேலாளர் பரத்குமார் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டிய கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
பரிசீலனை
மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம் 10 கி.மீ. ஆகும்.தற்போது இதில் கூடுதல் கிராசிங் ஸ்டேஷனை வழங்குவதற்கான செயல்பாட்டுத் தேவை இல்லை. இருப்பினும் நிறுத்தத்துக்கான முன்மொழிவு தேவைகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படலாம் என்று கூறி யிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
புதிய ரயில் நிலையம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்டங்களின் மிக முக்கியமான திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது பல்வேறு காரணங்களுக்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வந்து செல்வர். வருங்காலங்களில் மெட்ரோ உள்ளிட்ட மின்சார ரயில்கள் குறைந்த தொலைவுக்கு அதிக ளவில் இயக்க வாய்ப்பு உள்ளது.
மதுரை எய்ம்ஸ் என்ற பெயரில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும்பட்சத்தில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.