

தூத்துக்குடி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் கடந்த 5 நாட்களில் 26 துணை மின்நிலையங்கள், 111 மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் கடந்த 2 மாதங்களாக மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகி றது.
நாள் முழுவதும் மின் தடை செய்யாமல் 3 மணி நேரம் மட்டுமே மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகளை மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மேற்பார்வை பொறியாளர் ஜெ.அ.ஞானேஸ்வரன் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் ஆதிபராசக்தி நகர் பகுதியில் நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் 25 துணை மின் நிலையங்களில் உள்ள ஆற்றல் மின்மாற்றிகள், மின்னூட்டிகள், ரிலேகள், காற்று திறப்பான்கள் மற்றும் அலுமினிய பார்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோல 111 மின் தொடர்களில் உள்ள மின்கம்பங்களில் சூழ்ந்திருந்த செடி, கொடிகள் களையப்பட்டு மின்பாதை வழித்தடங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
இந்த மின் பாதைகளில் சேதமடைந்திருந்த 30 மின் கம்பங்கள், பழுதடைந்த 301 இன்சுலேட்டர்கள், சாய்ந்த நிலையில் இருந்த 86 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. தொய்வாக இருந்த மின் பாதைகளில் 26 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
மின் பாதைகளில் இருந்த 274 இழுவை கம்பிகள் சீர் செய்யப்பட்டுள்ளன. மின் பாதைகளுக்கு அடியில் உராயும் நிலையில் இருந்த மரக்கிளைகள் 1,361 இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. வரும் 28-ம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். செயற்பொறியாளர்கள் ரொ,ரெமோனா (பொது), செ.விஜயசங்கர பாண்டியன் (நகர்ப்புற விநியோகம்), உதவி செயற்பொறியாளர்கள் ஜெயக்குமார் (நகர்ப்புறம்- தெற்கு), சுப்புலட்சுமி (முத்தையாபுரம் தெற்கு பிரிவு) ஆகியோர் உடனிருந்தனர்.
குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம், தக்கலை, குழித்துறை, செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம், கருங்கல், கன்னியாகுமரி, கேப் உள்அரங்கு, முஞ்சிறை, நடைக்காவு, மார்த்தாண்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கடந்த 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. 90 பொறியாளர்கள், 2,015 களப்பணியாளர்களைக் கொண்டு மின் கம்பிகளில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகள், மற்றும் தென்னை ஓலைகள் 11,232 இடங்களில் வெட்டி அகற்றப்பட்டன.
புதிதாக 62 மின்கம்பங்களும், 125 இடங்களில் பழையவற்றுக்கு பதில் புதிய மின்கம்பங்களும் ஊன்றப்பட்டன. 47 மின்கம்பங்கள் சீர் செய்யப்பட்டன. 39 பழைய இன்சுலேட்டர்கள் கழற்றப்பட்டு புதிய இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டன. இப்பணிகள் வரும் 28-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.