Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

தூத்துக்குடியில் திரவ உயிர் உரம் உற்பத்தி தொடக்கம்: 3 மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்க ஏற்பாடு

தூத்துக்குடி வேளாண்மைத் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள திரவ உயிர் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

தற்போதுள்ள சூழ்நிலையில் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதனைத் தவிர்த்திட விவசாயிகள் உயிர் உரங்களைப் பயன்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதிக மகசூல் பெற்று மண்வளத்தை பாதுகாத்திட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டு தேசிய வேளாண்வளர்ச்சி திட்டம் மற்றும் நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் திட உயிர் உர உற்பத்தி மையத்தை திரவ உயிர் உரஉற்பத்தி மையமாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக உயர்தொழில்நுட்பம் வாய்ந்த இணைஓட்ட வடிப்பான், தானியங்கி கொள்கலன் அடைப்பான் ஆகிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு,திரவ உயிர் உரம் உற்பத்தி தற்போதுதொடங்கப்பட்டுள்ளது.

திரவ உயிர் உர உற்பத்தி இலக்கு50,000 லிட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரவ உயிர் உரம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 35,700 லிட்டர், விருதுநகர் மாவட்டத்துக்கு10,000 லிட்டர், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 4,300 லிட்டர் என்ற அளவில்அம்மாவட்ட ங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளது.

திட உயிர் உர உற்பத்தி இலக்கு94.51 மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்கப்பட்டு தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளது என்றார் ஆட்சியர்.

தொடர்ந்து சிறந்த விவசாயியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டுமுருகேசன் என்பவருக்கு வேளாண்மை துறையின் மூலம் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், துணை இயக்குநர்கள் தமிழ்மலர், பழனி வேலாயுதம், ஜெயசெல்வின் இன்பராஜ், சாந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x