Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

கட்டுமானப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து கொட்டரை நீர்த்தேக்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கனவுத் திட்டமான கொட்டரை நீர்த்தேக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.67.5 கோடி மதிப்பில் நீர்த்தேக்கம் கட்டும் பணிக்கு 27.2.2016 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்துக்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ரூ.56.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டம் 2018 பிப்ரவரியில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்காக கடந்த ஆண்டு ரூ.92.7 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, நீர்த்தேக்கப் பணியின் மொத்த மதிப்பீடு ரூ.149.4 கோடியாக உயர்ந்தது.

இந்த நீர்த்தேக்கத்தில் நீர் தேங்கும் பரப்பு 815 ஏக்கர். இதன் இடதுபுறத்தில் 9.1 கி.மீ நீளமும், வலது புறத்தில் 6.75 கி.மீ நீளமும் உடைய வாய்க்கால்கள் உள்ளன. இந்த நீர்த்தேக்கத்தில் 4.42 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியும். கொட்டரை, ஆதனூர், புஜங்கராயநல்லூர், கூடலூர், கூத்தூர், நொச்சிக்குளம், தொண்டப்பாடி, அழகிரிபாளையம், சாத்தனூர் ஆகிய 9 கிராமங்களில் உள்ள 4,194 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும். இதன் மூலம் 4,830 டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியும். இத்தகைய திட்டம் பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவடையாமல் உள்ளது.

இதுகுறித்து கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரஞ்சோதி கூறியது:

நீர்த்தேக்கம் அமைவதால் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில், அரசுக்கு சொற்பவிலையில் நிலங்களைக் கொடுத்த விவசாயிகள், 5 ஆண்டுகளாகியும் திட்டம் முடிவடையாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். இடது, வலதுபுற வாய்க்கால்கள் கட்டுமானப் பணியும் நிறைவடையாததால், மருதையாற்று தண்ணீர் இதர கிராமங்களுக்குச் செல்ல வாய்ப்பில்லாமல், அப்பகுதி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர்த்தேக்க மதகுகளின் தூண்கள் உள்ளிட்ட முக்கியமான கட்டுமானங்களில்கூட விரிசல்கள் காணப்படுகின்றன. எனவே, கட்டுமானப் பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து, நீர்த்தேக்கத்தை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

நீர்த்தேக்க கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டன. கரோனா ஊரடங்கு காரணமாக பணியாளர்கள், கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், கடந்த ஓராண்டாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவலின் தாக்கத்தால் சிறிதளவு நில ஆர்ஜிதமும் நிறைவடையாமல் உள்ளது.

கட்டுமானப் பணிகளில் காணப்படுவது மிகச்சாதாரணமான நுண்விரிசல்தான். அதனால், கட்டுமானத்துக்கு பாதிப்பில்லை. ஒருமுறை இப்பகுதியில் இடி விழுந்து, பெரிய விரிசல் ஏற்பட்ட தடுப்புச் சுவரை பாதுகாப்பு கருதி அகற்றிவிட்டோம். நிகழாண்டு, மழைக்காலத்தில் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவுக்கு மருதையாற்று நீரை சேமிக்க திட்டமிட்டுள்ளோம். 2022 மார்ச்சில் நீர்த்தேக்க திட்டப் பணிகள் முழுமையடைந்து, மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x