

அரிய வகை கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை சகோதரிகளுக்குத் தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ஜோசப் (76). இவரது மகள் வழிப் பேத்திகள் ரெபேகா ஜே சுஸ்மிதா (20), மெர்லின் ஜே டயானா (17). இவர்கள் பிறந்ததில் இருந்தே அரிய வகையான ரெடினைடீஸ் பிக்மென்டோ என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களைச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை, பல்வேறு தனியார் கண் மருத்துவமனைகளுக்கு ஜோசப் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இவர்களைப் பாதித்துள்ள கண் நோய்க்கான மருத்துவம் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளதாக கூறி சிகிச்சையில்லாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தற்போது ரெபேகா சென்னை கல்லூரி ஒன்றில் பிஏ 3-ம் ஆண்டும், மெர்லின் சென்னையில் பள்ளி ஒன்றில் பிளஸ் 2வும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது பேத்திகளை கேரளாவில் உள்ள ஆயுர்வேதக் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நிதியுதவி அளிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சிறுமிகள் இருவருக்கும் மருத்துவ உதவி வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், ’’அரசு மருத்துவ உதவி வழங்கும் நோய்களின் பட்டியலில் இந்த அரிய வகைக் கண் நோய் இல்லை என்றும், இருவரும் சிகிச்சை பெற முடிவு செய்துள்ள ஆயுர்வேத மருத்துவமனை, அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் இல்லை என்று கூறி நிதியுதவி மறுக்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ’’மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவத்தை அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இரு சிறுமிகளுக்கும் வந்துள்ளது அரிய வகைக் கண் நோய். ஆயுர்வேத சிகிச்சையில் சிறுமிகளின் தற்போதைய 10 டிகிரி பார்வையைப் பாதுகாக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காகக் கருதித் தனி நீதிபதி உத்தரவில் தலையிட விரும்பவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது’’.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.