

தேர்தலில் வென்று ஐம்பது நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பட்டியலை அளித்துவிட்டு அதிலுள்ளோர் விவரங்களைத் தெரிவிக்காமல் முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து வருகிறார். அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸில் உள்ள பலரும் "எங்கள் எம்எல்ஏதான் அமைச்சர்" என்று தகவல்களைக் கசிய விடுகின்றனர்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்து 50 நாட்களைக் கடந்துவிட்டது. புதுவை மாநிலத்தோடு தேர்தல் நடந்த தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்று சட்டப்பேரவை கூடிவிட்டது. இருப்பதிலேயே சிறிய மாநிலமான புதுவையில் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். ஆனால், அமைச்சர்கள் பதவியேற்பு முதல் முறையாக நீண்டகாலம் தள்ளிப்போனது.
பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மோதல், பாஜக அமைச்சர் பட்டியலில் இடம் பெற்றவர் மாற்றம், என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சர் பதவிகளைப் பெற போட்டா போட்டி, தேய்பிறை முடிந்து வளர்பிறை, நல்ல நாள் என இழுபறி முடிவுக்கு வராமல் நீண்டுவந்தது.
பாஜக தரப்பில் இறுதியாக நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாகப் பரிந்துரைக்கப்பட்டனர். இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து அளித்தார்.
என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சராக வரவுள்ள மூவர் யார் என்று பெயர் விவரங்கள் ஏதும் முதல்வர் ரங்கசாமி தெரிவிக்கவில்லை. மவுனமாகவே இருக்கிறார். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸில் உள்ள எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள், தங்கள் எம்எல்ஏதான் அமைச்சர் என்ற ரீதியில் தகவல்களைப் பரப்பத் தொடங்கினர்.
இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கேட்டதற்கு, "சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமி வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்புதான் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். பதவியேற்பு விழாவின்போதுதான் அமைச்சர்கள் பெயர்கள் தெரியும். அமைச்சர்களுக்கான துறைகளும் அதற்குப் பின்னர்தான் தெரியும். இதர மாநிலங்கள் வேறு புதுச்சேரி வேறு" என்கிறார்கள் அமைதியாக.