

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இறந்த மாணவியின் தாய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி எஸ்எஸ்பியிடம் மனு அளித்தனர். அதில் பாஜக எம்எல்ஏ குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மத்திய உள்துறை அமைச்சருக்கு சிபிஎம் கடிதம் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இறந்த விவகாரத்தில் குற்றவாளி அருண்குமாருக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்க்குக் கொலை மிரட்டல் இருப்பதால் அக்குடும்பத்திற்கு, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறைமலை அடிகள் சாலையிலுள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அதில், "மாணவியின் பெற்றோர், அருண்குமார் தரப்பினர் மீதுகொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை. மேலும் குற்றவாளிகள் தொடர்ந்து மாணவியின் பெற்றோரைத் தற்போது மிரட்டியும் வந்துள்ளனர். பின்புலத்தில் அப்பகுதி பாஜக எம்எல்ஏவும் உள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சருக்கு புகார் மனு
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர், துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலர் ராஜாங்கம் இது தொடர்பாக அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:
”கடந்த மார்ச்சில் தாயார் வீட்டில் இல்லாதபோது மாணவி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் பாலியல் பலாத்காரத்தை செல்பேசியில் படமாக்கி குற்றவாளியால் மிரட்டப்பட்டு தொடர் துன்புறுத்தலுக்கு ஆளானார். படங்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவதாக மாணவி அச்சுறுத்தப்பட்டுள்ளார். தொடர் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானதால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனது திருவனந்தபுரத்திலுள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு மாணவியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அருண்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
இச்சூழலில் மாணவி இறந்ததால் அவரது உடலுடன் ஜூன் 21-ம் தேதி வந்த அவரது தாயார் தாக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக தாக்கப்பட்டு தொடர்ந்து மிரட்டப்படுகிறார். தற்போது குற்றம் சாட்டப்பட்டோருக்கு அத்தொகுதி பாஜக எம்எல்ஏ (சாய் சரவணக்குமார்) ஆதரவு தருவதாலும், உள்ளூர் காவல்துறை அவர்களுக்கே ஒத்துழைப்பு தருவதாலும் நியமான விசாரணைக்காக மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்புகிறோம்.
குற்றம் சாட்டப்பட்டவரின் மாமாவும் அரசியல் செல்வாக்கு உடையவர். இதனால் அரசியல் தலையீட்டைத் தடுத்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கும், அவரது குடும்பத்துக்கும் நீதி வழங்க வேண்டும். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர் தப்பிக்கக் கூடாது".
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.