Published : 24 Jun 2021 05:40 PM
Last Updated : 24 Jun 2021 05:40 PM

சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாரா செல்லூர் ராஜூ?- மதுரை அதிமுகவில் ரகசிய விவாதம்

மதுரை

மதுரையில் உள்ள 3 அதிமுக மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மாநகர மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீர்மானம் நிறைவேற்றினாரா? இல்லையா? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே சசிகலா அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் செல்போனில் பேசி வருகிறார். அவர் பேசும் அந்த ஆடியோக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருவதால் அது அதிமுகவில் அதிர்வலைகளை உண்டாக்கி கொண்டிருக்கிறது.

அதனால், சசிகலாவுடன் பேசும் கட்சியினரை நீக்க வேண்டும் எனவும், சசிகலாவுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில், கட்சி ரீதியாக மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில், முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மாவட்டச் செயலாளராக உள்ள மேற்கு மாவட்டத்தில் அவரது தலைமையில் நிர்வாகிகள் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பத்திக்கையாளர்களை அழைத்து வெளிப்படையாக அறிவித்தார்.

அதுபோல், முன்னாள் மேயரும், எம்எல்ஏவுமான விவி.ராஜன் செல்லப்பாவும் அவர் மாவட்டச் செயலாளராக உள்ள புறநகர் கிழக்கு மாவட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவறே்றி செய்தியாளர்கள் சந்திப்பு வைத்திருந்தார்.

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு, ஜெ., பேரவை சார்பிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை எதிர்கட்சித் தலைவராக தேர்வான கே.பழனிசாமி, துணைத் தலைவராக தேர்வான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

மாநகரில் உள்ள ஜெ., பேரவை நிர்வாகிகள், அதன் மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சரவணன் தலைமையில் சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆனால், மாநகர அதிமுக செயலாளான முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்ற மாவட்டங்களை போல் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது அவரது மாநகர நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானவர்களுக்கே தெரியவில்லை.

சிலர் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும், சிலர் அவர் மற்றவர்களைப் போல் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களை அழைத்து சொல்லவில்லை. ஆனால், தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவரது கருத்தை அறிய செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, ‘‘நான்தான் முதல் முதலில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினேன். கட்சித் தலைமைக்கும் அனுப்பினேன், ’’ என்றார்.

செல்லூர் கே.ராஜூவை பொறுத்தவரையில் கட்சியிலும், அவரது தொகுதியிலும் சரி சாதாரண ஆழ்துளை கிணறு திறப்பு விழா முதல் எந்த ஒரு கட்சி கூட்டங்களையும், விழாக்களையும் கட்சி நிர்வாகிகளை திரட்டி வெளிப்படையாகவும், பிரமாண்டமாகவும் செய்யக்கூடியவர். பத்திரிக்கையாளர்களை அழைத்து வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்.

ஆனால், சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றிய கூட்டத்தை மட்டும் எதற்காக வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் உண்மையில் கூட்டம் நடத்தி நிறைவேற்றினாரா? இல்லையா? என்ற சந்தேகமும் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதிமுகவில் பொதுவாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை அனைத்து அமைச்சர்களும் விமர்சனம் செய்தநிலையில் எப்போதுமே செல்லூர் கே.ராஜூ மட்டும் மட்டும் மறந்தும் சசிகலாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.

விமர்சனமும் செய்யவில்லை. மேலும், சசிகலாவை குறிப்பிடும்போது, ஜெயலலிதாவை கடைசி வரை சிறப்பாக கவனித்துக் கொண்டவர், அவரை மரியாதையுடன் பார்ப்பதாகவும், ‘சின்னம்மா’ என்றும் மதிப்பாகவே கூறி வந்துள்ளார்.

அந்த பாசத்தில் தற்போது வரை மாநகர அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை வெளிப்படையாக சொல்லாமல் கட்சித்தலைமைக்கு ரகசியமாக அனுப்பி வைத்திருக்கிறாரோ? என்று விவாதம் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x