தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையம்: புதுக்கோட்டையைப் பின்பற்றி உருவானதாக மாணவர்கள் பெருமிதம்

புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்.
புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்.
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் புதுக்கோட்டையைப் பின்பற்றி அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வப் பயிலும் வட்டம் எனும் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

படித்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் அரசு வேலை கிடைத்துவிடும் என்கிற நிலை மாறி, போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருவதால், போட்டித் தேர்வு மையங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டையில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் போட்டித் தேர்வு மையத்தை மேற்கோள் காட்டி, கடந்த கால் நூற்றாண்டுக்கும் முன்பு தமிழகம் முழுவதும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வப் பயிலும் வட்டம் எனும் இலவசப் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேர்ந்து பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசுப் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், "முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து எப்போது அரசுப் பணிக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும் என எதிர்பார்த்து இருப்பது வழக்கம். அதன்படி, இளைஞர்கள் அடிக்கடி 'எப்போது வேலை கிடைக்கும்' எனக் கேட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துக்குப் படையெடுத்துச் செல்வதை அறிந்த, அப்போதைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பி.சுரேஷ்குமார் (வேலை வாய்ப்பு இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்), போட்டித் தேர்வு வழியாக அரசுப் பணிக்குச் செல்வது குறித்து ஆலோசனை கூறினார்.

அவரது ஆலோசனையின்படி, விருப்பம் உள்ள இளைஞர்களை ஒன்றுசேர்த்து, தனியார் இடத்தில் தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற ஒரு போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. இங்கு, வங்கி, ரயில்வே போன்ற மத்திய அரசு மற்றும் மாநில அரசுத் தேர்வுகளுக்கு ஏற்ப புத்தகங்களையும் சேகரித்துப் படிக்கத் தொடங்கினோம்.

மையத்துக்கென பிரத்யேகமாக இடம் இல்லாததால் அவ்வப்போது பலரும் இட உதவி செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் பயிற்சியும், மாதிரித் தேர்வுகளும் மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும். இதை, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் விஸ்வநாதன், கணேசன் ஆகியோர் ஒருங்கிணைப்பர். இந்த மையத்தில் இருந்து படிப்படியாக மத்திய, மாநில அரசு வேலைக்கு 100-க்கும் மேற்பட்டோர் செல்லத் தொடங்கவே, ஏராளமானோர் படிப்பதற்கு வரத் தொடங்கினர். இதனால், இந்த மையத்தின் மீது நன்மதிப்பு ஏற்பட்டது.

இந்த அளவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டித் தேர்வு மையம் சிறப்பாகச் செயல்படுவதை அறிந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்திலும் தன்னார்வப் பயிலும் வட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது. தன்னார்வப் பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேவையான புத்தகங்களை வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையே ஏற்பாடு செய்கிறது. தேவைக்கு ஏற்ப மாதிரித் தேர்வுகளையும் நடத்துகிறது. இத்தகைய இலவசப் பயிற்சி மையத்தில் இருந்தும் ஏராளமானோர் அரசு வேலைக்குச் சென்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை அரசு வேலைக்கு அனுப்புவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் முன்மாதிரியாகத் திகழ்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்டத்தில் படித்து அரசு வேலைக்குச் சென்றவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக 'புதுகை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டு அறக்கட்டளை' தொடங்கிச் செயல்படுத்தி வருகிறோம். சுமார் 500 பேரைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு, கரோனா ஊரடங்கு சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உணவு வழங்குதல், உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளைச் செய்தோம்" என்றனர்.

இதுகுறித்து வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் பி.சுரேஷ்குமார் கூறுகையில், “1992-ல் குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாகப் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். வேலை கேட்டுப் படையெடுத்து வந்த இளைஞர்களில் போட்டித் தேர்வெழுத விருப்பம் தெரிவித்தோரைக் கொண்டு தன்னார்வப் பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டது.

பி.சுரேஷ்குமார்.
பி.சுரேஷ்குமார்.

மையமானது சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, அப்போதைய மாநில வேலை வாய்ப்புப் பயிற்சித் துறையின் இணை இயக்குநர் உஷாநாத் சேதுராயர் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 1999-ல் தமிழகம் முழுவதும் அரசின் திட்டமாக மாற்றப்பட்டது. கர்நாடகாவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கெல்லாம் புதுக்கோட்டையின் முன்னெடுப்புதான் காரணம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in