

சென்னையில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செவிலியர் குணமடைந்துவிட்டதாகவும், இந்த வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு, புதிதாக உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் நலம்பெற்றுப் பணிக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"டெல்டா பிளஸ் வைரஸ் வீரியமிக்கது. வேகமாகப் பரவக்கூடியது. என்றாலும் கூட, தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல், பாதிக்கப்பட்ட செவிலியருக்கு எப்போதும் அளிக்கக்கூடிய கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவர் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
அவருடன் தொடர்பிலிருந்தவரும் நலமாக இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், உறவினர்களை மருத்துவத்துறை கண்காணித்து வருகிறது.
இரண்டாவது அலை அதிகமானோரை பாதித்தது. இந்த வைரஸும் வேகமாகப் பரவக்கூடியது எனச் சொல்லப்படுகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் வந்திருக்கிறது. ஏற்கெனவே உள்ள தடுப்பூசியே இந்த வைரஸைக் கட்டுப்படுத்துகிறது என இங்கிலாந்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மருத்துவ வல்லுநர்களுக்கு உத்தரவிடுவோம். விமான நிலையத்திலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. வெளிநாட்டு விமானங்கள் முழுமையாகச் செயல்படாத நிலை உள்ளது. மீண்டும் விமானப் போக்குவரத்து வரும்போது கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.