Published : 24 Jun 2021 02:52 PM
Last Updated : 24 Jun 2021 02:52 PM

என்னை டாக்டரா என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார்; கரோனாவுக்குப் பிறகு அனைத்து மக்களும் டாக்டராகிவிட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின் சுவாரஸ்யம்

சென்னை

கரோனா அலை பரவல் நேரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்லி கேட்டபோது என்னை டாக்டரா என எடப்பாடி பழனிசாமி கேட்டார், ஆனால் கரோனா அலை பரவலுக்குப்பின் பொதுமக்கள் அனைவரும் பாதி டாக்டராகி விட்டனர் என முதல்வர் ஸ்டாலின் சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.

ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று பேசியதாவது:

“கரோனா வந்தபோது அதுபற்றி எதுவும் தெரியவில்லை, மருத்துவர்களுக்கே தெரியவில்லை, மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை என்று இப்போதிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். அந்தக் குழப்பமான சூழலில்தான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன். பலமுறை நான் சொன்னேன். “ஸ்டாலின் என்ன டாக்டரா?” என்று இப்போதிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். நான் உள்ளபடியே கோபப்படவில்லை.

உண்மை என்னவென்றால், கரோனாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் டாக்டர் ஆகிவிட்டார்கள். அதுதான் உண்மை. எல்லோருமே பாதி டாக்டராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேல் நாம் யாருமே, யாரையுமே நீங்கள் டாக்டரா என்று கேட்க முடியாது. அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

நான் எதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன் என்றால், அனைத்துத் தரப்பினரது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். திமுக ஆட்சி அமைந்ததும், சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை உள்ளடக்கி ஒரு குழுவை நியமித்தோம். அதிமுக சார்பில்கூட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இடம் பெற்றுள்ளார்.

இந்தக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இன்றைய அரசு செயல்படுகிறது. எனவே, கரோனா தடுப்புப் பணிகள் குறித்த உறுப்பினர்கள் அனைவரது கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூலமாக அரசுக்கு நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் உரிமையோடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், இது அரசியல் பிரச்சினை அல்ல, கட்சிப் பிரச்சினையும் அல்ல, ஆட்சியின் பிரச்சினையும் அல்ல, மக்கள் பிரச்சினை. மக்கள் நலன் சார்ந்திருக்கக்கூடிய பிரச்சினை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, 'நான் தவறாகச் சொல்லவில்லை, அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்' என்று சொன்னார். அதற்காக அவருக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் சேர்ந்து செயல்பட்டு - அனைத்துத் தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்று கரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும் என்று நான் உறுதிபட இந்த அவையிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x