கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கொடைக்கானல் பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த மினார்க் ஆவரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''கொடைக்கானலில் 31 தேவாலயங்கள், 18 கோயில்கள், 10 மசூதிகள் உள்ளன. இந்த வழிபாட்டுத் தலங்களிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்களை அதிக சப்தத்தில் ஒலிக்க விடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் ஒலி மாசு அதிகரித்து வனவிலங்குகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் பயன்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாக வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒலி மாசு கட்டுப்பாட்டுச் சட்டப்படி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்களில் குறிப்பிட்ட டெசிபலுக்கு மேல் ஒலிக்கவிடக் கூடாது. எனவே, கொடைக்கானலில் வனப்பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. ''கொடைக்கானல் பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதில் விதிமீறல்களை ஆய்வு செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாசு கட்டுப்பாட்டுப் பொறியாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

இந்தக் குழு ஆய்வுசெய்து ஒலிபெருக்கி விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தும் கட்டிடங்களின் மின் இணைப்புகளைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in