Published : 24 Jun 2021 01:50 PM
Last Updated : 24 Jun 2021 01:50 PM

சென்னை புறநகர் ரயில் சேவை: நாளை முதல் பொதுமக்களுக்கும் அனுமதி

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. சென்னையில், நேற்று (ஜூன் 23) 396 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்றின் தாக்கம் குறைந்துவருவதால், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனிடையே, கடந்த 7-ம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 279 ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர், 14-ம் தேதி முதல் இந்த எண்ணிக்கை 323 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி இருந்தது.

இந்நிலையில், நாளை முதல் (ஜூன் 25) பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றிப் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதில், பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனவும், ஆண்கள் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து அதாவது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம் என்றும், ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருவழிப் பயணம் மட்டுமே மேற்கொள்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x