ஜூன் 25-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை அடுத்து 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஊரக அளவில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் நடத்தப்படாமல் அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தை கவனிக்க அரசாணை போடப்பட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.

புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேற்கண்ட சூழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார்.

இதில் மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலை, வெற்றி வாய்ப்பு, கரோனா தொற்று, தேர்தல் நடத்தும் சூழல், உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25-06-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும். அதுபோது மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in