Published : 24 Jun 2021 01:09 PM
Last Updated : 24 Jun 2021 01:09 PM

நாகையில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் கரோனா நோயாளி உயிரிழந்ததாக புகார்

ராஜேஷ் | கோப்புப் படம்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் கரோனா நோயாளி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகை மாவட்டம், நாகூர் சிவன் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராஜேஷ் (36). இவர் பிரபல தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜேஷ், கடந்த 11 நாட்களாக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குத் துணையாக அவரது மனைவி சுபா இருந்தார். உடல் நலம் தேறிவந்த நிலையில், நேற்று இரவு (ஜூன் 23) ராஜேஷ், உணவைச் சாப்பிட்டுவிட்டு, தன் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருடன் சிகிச்சை பெற்று வந்த 15 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக, இதுகுறித்து சுபா மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக, மருத்துவமனை ஊழியர்கள் சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு சுவாசம் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

ராஜேஷ் கடைசிப் படுக்கையில் படுத்திருந்ததால், ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் கொடுப்பதற்குள் பரிதாபமாக இறந்தார். இதனால், சுபா கடும் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனை நிர்வாகத்தினரின் அலட்சியத்தால்தான், தன் கணவர் இறந்ததாக புகார் கூறி, மருத்துவமனை வாசலில் அமர்ந்து கதறி அழுது புலம்பினார்.

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், "ஆக்சிஜன் சப்ளை செய்யும் இயந்திரத்தில் ஆக்சிஜன் அளவைக் கூடுதலாக வைத்துவிட்டார்கள். இதனால், அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஆக்சிஜன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் கசியத் தொடங்கியது.

இதனால், தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால், உடனடியாக ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திவிட்டோம். சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுத்து அனைத்து நோயாளிகளையும் காப்பாற்றிவிட்டோம். துரதிருஷ்டவசமாக ராஜேஷைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது" என்றனர்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று (ஜூன் 24) காலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் சப்ளையை நிறுத்தியதாகக் கூறுகிறார்கள். அனைத்து நோயாளிகளும் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், ராஜேஷ் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்" என ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர், நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் விஸ்வநாதன், நிலைய அலுவலர் மருத்துவர் உமா மகேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x