Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் திடீரென 2 ஆயிரம் பேர் அதிகரிப்பு: பாதிப்பைக் குறைத்து காட்டுவதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் திடீரென 2,008 பேர் அதிகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்தொற்று எண்ணிக்கையை மாநகராட்சி குறைத்து காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் கரோனா 2-ம் அலை பரவலில் கடந்த மே 12-ம் தேதி ஒரேநாளில் 7,564 பேருக்கு தொற்று உறுதியாகி உச்சநிலையை அடைந்தது. இதன் பின்னர் அன்றாடம் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இறங்குமுகமாக இருந்தது. கடந்த 18-ம் தேதி முதல் 500-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. 22-ம்தேதி 410 பேருக்கு தொற்று பாதித்து இருந்தது.

மாநகராட்சி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 21-ம் தேதி1,343 பேர் சிகிச்சையில் இருந்தனர்.ஒவ்வொரு நாளும் 500-க்கும் குறைவாக தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 22-ம் தேதியன்றுசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைதிடீரென 3,351 ஆக உயர்ந்தது.சிகிச்சை பெற்று வருவோரில் கூடுதலாக 2,008 பேர் சேர்க்கப்பட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள்கூறியதாவது: மாநகராட்சி கரோனாசிகிச்சை மையங்களில் தங்கவைக்கப்பட்ட நோயாளிகளை விட, வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். இது மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இவ்வாறு தனிமையில் இருப்பவர்களை, அடுத்த நாளே கூட குணமடைந்தவர் பட்டியலில் சேர்க்கலாம். இதை யாரும்கண்டுபிடிக்க முடியாது.

இதேபோன்றுதான், கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலையின்போது, கரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை மாநகராட்சி குறைத்துக் காட்டியது. பின்னர் திடீரென 400-க்கும் அதிகமான இறப்புகளை கரோனா மரணம் என கணக்கில் காட்டியது. அப்படித்தான் தற்போதும்திடீரென 2 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நி்லையில், தரவுகளை கணினியில் பதியும்போது ஏற்பட்ட குளறுபடியால் வீட்டு தனிமையில் இருந்த2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குணமடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அது சரி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறைஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பதில் ஏதும் அளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x