Last Updated : 24 Jun, 2021 05:50 AM

 

Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து கோயில் சொத்துகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி

சென்னை

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து கோயில் சொத்துகளும் விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு 3-டி படங்களுடன் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் அனைத்து பணிகளிலும் ஈடுபடும்போது அவர்களை அர்ச்சகர் பணியிலும் தாராளமாக ஈடுபடுத்தலாம்.அர்ச்சகர் பணி கோரி பெண்களிடமிருந்தும் நிறைய கோரிக்கைகள் வந்துள்ளன. பெண்களை கோயில்அர்ச்சகர் ஆக்குவது என்பது வெறும் மதம் சார்ந்த செயல் அல்ல.சமவாய்ப்பையும் சமூக மாற்றத்தையும் இதன்மூலம் உறுதிசெய்ய முடியும். இது திமுக அரசின் கொள்கை ஆகும். கோயில்களில் அர்ச்சகராக பணியாற்றுவது என்பது தெய்வீகப்பணி.

கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவது மிகவும் அவசியம். அந்த வகையில், தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 3 லட்சத்து50 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்து சமயஅறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். எஞ்சியுள்ள நிலங்களின் விவரங்களும் விரைவில் வெளியிடப்படும்.

கோயில் சொத்துகளில் இருந்துகிடைக்கும் வருமான விவரங்களும், பாக்கித் தொகையை செலுத்தாதவர்களின் விவரங்களும் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். கோயில்களின் நிலங்களில் உள்ள கடைகளுக்கான வாடகையை திருத்தியமைக்கவும், பாக்கித்தொகையை வசூலிக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் குழுக்களை அமைத்துள்ளோம்.

கோயில் நிர்வாக பணிகளை மேம்படுத்தவும், சொத்துகளை பராமரிக்கவும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்துவது அவசியம். அந்த வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு கோயில்சொத்துகளையும் டிஜிட்டல்மயமாக்க சர்வே செய்து அந்த விவரங்களை 3-டி படங்களாக இணையதளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கோயில்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் பதிவேற்றப்படும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அவற்றில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக 34 ஆயிரம்கோயில்கள் உள்ளன. 12,959 கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி ஒதுக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், கோயில்களில் தெப்பக்குளங்கள் சீரமைக்கப்படும். தேர்கள் பழுது பார்க்கப்படும்.

சுற்றுலா துறையுடன் இணைந்து சமய சுற்றுலா திட்டத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம். அதன்படி, அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

திமுக இந்துக்களுக்கு எதிரானது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக அரசின்சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத சிலர், இதுபோன்ற கருத்துகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.எந்த மதத்தினரின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் திமுகஅரசு புண்படுத்தாது என்று உறுதிஅளிக்கிறேன். கோயில்களில் தமிழ் அர்ச்சனையைப் பொருத்தமட்டில்,பக்தர்கள் வேண்டுகோள் வைத்தால் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x