

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை உறுதியாகத் தடுப்போம் என்றும் இந்த விஷயத்தில் அரசியல் செய்யப்படுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, “மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
மேகேதாட்டுவில் அணை கட்டும் நடவடிக்கை தடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. முந்தைய அரசும் இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில் பிரதமரை முதல்வர் சந்தித்தபோது இதுகுறித்து வலியுறுத்தியுள்ளார். அப்போது பிரதமர், ‘மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து பேசிவிட்டு, அவர் கருத்தை கேட்டு என்னிடம் வாருங்கள். நான் அவரிடம் அறிவுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மேகேதாட்டு அணை குறித்து விரிவான திட்ட அறிக்கைதான் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எங்கும் எடுக்காத வகையில் தமிழக அரசு ‘செக்’ வைத்துள்ளது. அவர்களால் இதை மீறி அணை கட்ட முடியாது. ஆனால், அரசியல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேச்சு ஆச்சரியமளிக்கிறது. வீணாக அரசியல் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.