Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

கூட்டுறவு கடன் தள்ளுபடி முறைகேடு: ஆய்வுக்குப் பின் ரசீது வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை

கூட்டுறவு கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், ஆய்வு நடத்திய பின்னர் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை ரூ.17,438.73 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

2021-ல் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.12,110 கோடிக்கான ரசீதுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ளவர்களுக்கு விரைவாக வழங்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘‘கடந்த ஜனவரி 31-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.12,110 கோடி கடன்களில், நபார்டு வங்கி ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே தந்துள்ளது. ரசீதுகள் வழங்கும் விவகாரத்தில், அரசு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதில் பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, 136 சங்கங்களில் ரூ.201 கோடி, 229 சங்கங்களில் ரூ.108 கோடி, 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

சேலத்தில் மட்டும் ரூ.1,250 கோடி, ஈரோட்டில் ரூ.1,085 கோடிஅளவுக்கு கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 2,500 கிராம்தங்க நகைகளைக் காணவில்லை. ரூ.11.69 லட்சம் பணம் செலுத்தப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவை குறித்தெல்லாம் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்த பின்னர், ரசீதுகள் வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x