Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

புதுச்சேரியில் பாலியல் வன்முறையில் கல்லூரி மாணவி இறந்ததாக புகார்: போலீஸார் மீது மாதர் சங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகர்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்புகார் அளித்திருந்தார். அதில், “தனது 17 வயது மகள், கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தஅருண்குமார் என்ற இளைஞர் அம்மாணவியை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததோடு, அதை காட்டிமிரட்டி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி வந்துள்ளார். இதனால் அம்மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்தஜூன் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எனவே அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி அறிந்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கப் பிரதேசத்தலைவர் சந்திரா, செயலாளர் சத்யாஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை சந்தித்து நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று இச்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் தலைமையில் மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கல்லூரி மாணவி இறந்த விவகாரத்தில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தாமல், குற்றவாளி அருண்குமாரை தப்பிக்க விட்டுள்ளனர்.

இதற்கு காரணமான காவல் அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். குற்றவாளிகளால் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு ஆபத்து உள்ளது. காவல்துறை தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x