

நியாய விலைக்கடைகளில், குடும்பஅட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் கரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக நுகர்வோர் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. 10.18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் இலவச அரிசி, கோதுமை மற்றும் மானிய விலையில் பருப்பு,சர்க்கரை, பாமாயில், மண்ணெண் ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
குடும்ப அட்டைதாரரின் ஸ்மார்ட் கார்டுகளை பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து, குடும்ப உறுப்பினரின் ரேகைகளை பதிவு செய்த பின்னர், பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது, ரேஷன் பொருட் களுடன், 2-ம் கட்ட கரோனா நிவாரணத் தொகை ரூ.2000மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொருட்கள் வாங்காதவர்களுக் கும், வழங்கியதாக பதிவு செய்து முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, கோயம்புத் தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும் போது, ‘‘நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இருப்பு, தினமும் விற்கப்படும் பொருட்களின் விவரம் குறித்து தகவல் பலகையில் எழுதி, பொதுமக்கள் பார்வையில் படும்படி, முகப்பில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.
சில குடும்ப அட்டைதாரர்கள் சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்குவர். அவர்களுக்கு தெரியாமல் அரிசி, பாமாயில், கோதுமை வாங்கியதாக அவர்களது அட்டையில் குறிப்பிட்டு விடுகின்றனர்.
பின்னர், அந்த பொருட்களை கடைக்காரர்கள் தரகர்களிடம் விற்கின்றனர்.
இதேபோல, பல மாதங்களாக பொருட்கள் வாங்காத குடும்ப அட்டையையும், சில கடை ஊழியர்கள் தவறாக பயன்படுத்தி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாக பதிவிட்டு, தாங்கள் பதுக்கிக் கொள்கின்றனர். ரேஷன்பொருட்கள் வாங்கியது தொடர்பான குறுந்தகவலும் உடனடியாக தொடர்புடையவர்களுக்கு கிடைப்பதில்லை. அவ்வாறு தாமதமாக கிடைத்தாலும், அதில் உள்ள எண்ணுக்கு யாரும் புகார் செய்வதில்லை. இதனால் முறைகேடு அதிகரிக்கிறது.
பீளமேடு, ஹோப்காலேஜ் பகுதியில் நியாய விலைக்கடைகளில், நுகர்வோருக்கு கரோனா கால நிவாரணத் தொகை, மளிகைப் பொருட்களை வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். சிலருக்கு வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் ஓரிரு பொருட்கள் குறைவாக உள்ளன. இந்தமுறைகேடுகளை தடுக்க வேண்டும்’’ என்றார்.
கண்காணிப்பு
மாவட்ட வழங்கல் துறை அதிகாரி கூறும்போது, ‘‘பீளமேடு, சிங்காநல்லூரில் உள்ள சில நியாயவிலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
சில கடைகளில் மளிகைப்பொருட்கள் இருப்பு இல்லாததால்,உடனடியாக தர முடிவதில்லை. மாவட்டத்தில் தற்போது வரைகரோனா நிவாரணத் தொகை 58 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள் ளது. நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் தொடர்பாக, அதிகாரிகள் குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.