

கோவை மாவட்டக் காவல்துறையில், லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர், காவலர்கள் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கிணத்துக்கடவு நல்லட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி(71). இவர், கடந்த 20-ம் தேதி இருசக்கர வாகனத்தில், நல்லட்டிபாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கார் மோதியதில் படுகாயமடைந்த ராஜாமணி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக கிணத்துக்கடவு போலீஸார் விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர், பொள்ளாச்சி அர்த்தனாரிபாளையத்தைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்(33) என்பதும், அந்த காரின் உரிமையாளர் பொள்ளாச்சியைச் சேர்ந்த சரவணன் என்பதும், இவர் அங்கு நூற்பாலை நடத்தி வருவதும் தெரியவந்தது.
விபத்துக்கு காரணமான காரை, வழக்கமான நடவடிக்கைகள் முடிந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், காரைவிடுவிக்க தலைமைக் காவலர் வெங்கடாசலம் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கேட்டதாகவும், ஓட்டுநர்ஆர்.சுரேஷ் மூலம் கொடுத்தனுப்பிய ரூ.12 ஆயிரத்தை, தலைமைக்காவலரிடமிருந்து காவல் ஆய்வாளர் சுரேஷ் பெற்றுக்கொண்டதாகவும் மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி ஆகியோரிடம் சரவணன் புகார் அளித்தார்.
இதையடுத்து, பேரூர் டிஎஸ்பி திருமால் விசாரணை நடத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் சுரேஷ்,தலைமைக் காவலர் வெங்கடாசலம் ஆகியோரை, ஆயுதப் படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் சுரேஷ்,தலைமைக்காவலர் வெங்கடாசலம் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி நேற்று உத்தரவிட்டார்.
மற்றொரு சம்பவம்
துடியலூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஆயுர்வேத மையத்தின் உரிமையாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத் தினத்திடம் ஒரு புகார் அளித்தார். அதில், “துடியலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கிஷோர், முதல் நிலைக் காவலர் ஜோதிமணி ஆகியோர் வாரந்தோறும் லஞ்சம் கேட்கின்றனர். இல்லையெனில் இங்கு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக வழக்கு பதிந்து விடுவோம் என மிரட்டுகின்றனர்” எனக் கூறியிருந்தார்.
விசாரணையில், வாரந்தோறும் கிஷோர் ரூ.20 ஆயிரம், ஜோதிமணி ரூ.5ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்பி நேற்று உத்தரவிட்டார்.