

நீலகிரி மாவட்டத்தில் விளையும்பேரிக்காய்களை, குரங்கு, கரடி,காட்டெருமை, வவ்வால்கள் சேதப் படுத்துவதால், ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் முன்பு 10,000-க்கும் அதிகமான பேரிக்காய் மரங்கள் இருந்தன. தற்போது மூன்றில் ஒரு பங்காக பேரிக்காய்மரங்கள் குறைந்துவிட்டன.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை பேரிக் காய்கள் காய்க்கும். முன்பு,ஒரு மரத்துக்கு சுமார் 100 கிலோ வரை பேரிக்காய்கள் கிடைத்தன. தற்போது 25 கிலோ கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குன்னூர் அருகே வெலிங்டன் பழத்தோட்டத்தை சேர்ந்த விவசாயி பிலால் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 50 ஏக்கரில்மட்டுமே பேரிக்காய் மரங்கள் உள்ளன. குரங்குகள், கரடிகள் பேரிக்காய்களை உண்பதாலும்,காட்டெருமைகள் மரங்களை முறித்து, காய்களை சாப்பிடுவதாலும், பெரும் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக வவ்வால்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. கூட்டமாக இரவில் வரும் வவ்வால்கள், பேரிக்காய் மரங்களிலேயே தங்கி, காய்களை கடித்து சேதப்படுத்துகின்றன.
இதுகுறித்து வனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையிடம் பலமுறை புகார் அளித்தும்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேரிக்காய் மகசூல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே. மரங்களை 15 ஆண்டுகள் பராமரித்தால்தான் காய் பிடிக்கும். தற்போது, ஆண்டுக்கு ரூ.3-ல் இருந்து ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. சட்டி பேரிக்காய் கிலோ ரூ.30 வரையிலும், மற்ற பேரிக்காய்கள் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜாம் தயாரிக்கும் நிறுவனங்கள் பேரிக்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்வதால்,விவசாயிகளுக்கு மொத்த வருவாய் கிடைத்து வந்த நிலையில், விலங்குகள், பறவைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். விலங்குகள், பறவைகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க,வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.