

மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் கரோனா உதவித்தொகை 2-ம் தவணை பெற சேலத்தில் கரோனா பரவல் அச்சமின்றி ரேஷன் கடையில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நாட்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது. தற்போது, சேலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் 500-க்கும் குறைவாகி வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தை, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து ஒருவருடன் ஒருவர் நெருங்கி நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சேலம் சின்னதிருப்பதி ஏரிக்காடு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் கரோனா உதவித்தொகை 2-ம் தவணை பெற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், முகக் கவசத்தை முறையாக அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், பொருட்களை வாங்க வந்த பலரும் அதிருப்தியடைந்தனர்.
தற்போது, தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பொதுமக்களின் இதுபோன்ற அலட்சியத்தால், மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி வட்டங்கள் போடப்பட்டுள்ளதா என்றும் நுகர்வோர் முகக் கவசங்களை அணிந்து வந்து பொருட்களை வாங்குகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரோனா உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை பெற சேலம் சின்னத்திருப்பதி ஏரிக்காடு ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி திரண்ட பெண்கள். படம்: எஸ்.குரு பிரசாத்