

சென்னை ஜவுளி, நகைக் கடை வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், கிடங்குத் தெரு ஜவுளி வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருமணங்களுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், அதற்குத் தேவையான பட்டுப் புடவைகள், ஆபரணங்கள், தாலிக்கொடி போன்றவற்றை வாங்குவதற்கு, அவற்றை விற்கும் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை.
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துவிட்டு, ஜவுளி மற்றும் நகைக் கடைகளை மூடி வைப்பது ஏற்புடையது அல்ல. ஜவுளி, நகைக் கடை கட்டிடங்களுக்கு 6 மாதங்களுக்கான சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை ரத்து செய்ய வேண்டும்.
சென்னையில் ஜவுளி, நகை மற்றும் நகை அடகுக் கடைகள் கடந்த 50 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 24 முதல் 27-ம் தேதி வரை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.