சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

அதுகுறித்து பல்வேறு நாளிதழ்களிலும் செய்தி வெளியானது. அவற்றின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.

இந்த வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. மழைநீர் தேக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய அக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. இதை கண்காணிக்குமாறு தலைமைச் செயலருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கை, சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. உள்ளாட்சி அமைப்புகளும், அவர்களின் அன்றாட பராமரிப்புப் பணிகள் குறித்துதான் அறிக்கை தாக்கல் செய்கின்றன.

பிரச்சினையைத் தீர்க்க யாரிடமும் திட்டம் இல்லை. இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இவர், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடனான கூட்டம் நடத்தி, இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாகத் தடுக்க உரிய செயல் திட்டத்தை உருவாக்கி முறையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆக. 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in