Last Updated : 24 Jun, 2021 05:52 AM

 

Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

செஞ்சி சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 4 கோடி மோசடியில் 3-வது நாளாக விசாரணை

செஞ்சி அருகே சத்தியமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர வைப்பு நிதி என்று போலி ரசீது வழங்கி ரூ. 4 மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக கூட்டுறவு துணைப்பதிவாளர் குருசாமி தலைமையிலான குழுவினர் இறந்த கூட்டுறவு சங்க செயலாளரின் குடும்பத்தார் மற்றும் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணை குறித்து கூட்டுறவு துறை அலுவலர்கள் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியது:

குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அனைவருக்கும் தாரளமாக செலவு செய்வார். இவர் கீழ் மாம்பாட்டு கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு நீதிமன்றம் மூலம் தடையாணை பெற்றார். மேலும் இச்சங்கத்தில் பொது விநியோக திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அதற்கும் 21 நாளில்உயர்நிதிமன்றம் மூலம் தடையாணை பெற்றார். இந்த மோசடியில் ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர், இறந்து போன துணைப் பதிவாளர், தற்போது பணியில் உள்ள அலுவலர் ஒருவர் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு உண்டு. தற்போது பணியில் உள்ள இணைப் பதிவாளர், துணைப் பதிவாளர் தவிர மற்ற அலுவலர்களுக்கு இந்த மோசடி குறித்து முன்பே தெரியும்.

மோசடியில் தொடர்பு உள்ளவர்களே தற்போது விசாரணைக்கு வருகின்றனர். இவர்கள் விசாரணைக் குழுவில் இடம் பெற்றால் உண்மையான நிலவரம் வெளியே வராது. வேறு மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டால்தான் உண்மை நிலவரம் வெளியாகும்” என்றனர். இதற்கிடையே, முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பணியாளர்கள் முன் ஜாமீன் எடுக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ சத்தியமங்கலம் கூட்டுறவுகடன் சங்கத்தில் நடந்துள்ள மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களின்வைப்புத்தொகையை திருப்பி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் மாநில அளவிலான கூட்டுறவு துறை அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படியும் மோசடி நடந்திருக்கலாம்

“கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடனிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது எப்படி எனில் ஒரு விவசாயி தனக்கு ரூ 50 ஆயிரம் கடன் போதுமென்றாலும், அவரின் பெயரில் ரூ 1 லட்சம் கடன் பெற்று, விவசாயிக்கு அவர் கேட்ட ரூ. 50 ஆயிரம் கொடுத்துவிட்டு, மீதியை சங்க செயலாளர் மற்றும் மோசடியில் தொடர்பு உள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

தள்ளுபடி ஆகும்போது இவர்கள் மோசடியாக பெற்ற ரூ 50 ஆயிரமும் தள்ளுபடியாகி விடும். இந்த முறைகேடும் நடந்திருக்க வாய்ப்புண்டு. மேலும் 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதிலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்க வாய்ப்புள்ளது.மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களிலும் முறைகேடுகள் நடந்து இருக்கலாம். இது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது” என்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x