

மக்களை நேரில் சந்திக்காமல் ‘வாட்ஸ் அப்’ உரை மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மு.க.ஸ்டாலின்
மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் மக்கள் மிகுந்த கோபமடைந்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால்தான் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த நேரத்தில் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் ‘வாட்ஸ் அப்’ மூலம் உருக்கமா கப் பேசி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ‘வாட்ஸ் அப்’ உரை மூலம் மக்களின் கோபத்தை முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார்.
ராமதாஸ்
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள் ளத்தால் மக்கள் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டிய முதல்வர் ஜெயலலிதா, ‘வாட்ஸ் அப்’ மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும், எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி’ என முதல்வர் கூறியிருக்கிறார். நிலவரத்தை உணர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்கூட் டியே நீரை திறந்துவிடாமல் ஒரே நாளில் அதிக அளவு நீரை திறந்துவிட்டதுதான் சென் னையில் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்கு காரணம். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
‘போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளேன். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் இருக்கிறேன்’ என முதல்வர் கூறியிருக்கிறார். சென்னையில் மழை விட்டு 16 நாட்களாகியும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இதுதான் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் விதமா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். உருக்கமாகப் பேசி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர் உணர வேண்டும்.