Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

விரிவாக்க பணிகள் இல்லாத நிலையில், விதிமீறல்கள் அதிகரிப்பு பேருந்துகள் இயங்காத சாலையில் போக்குவரத்து நெருக்கடி: தொலைநோக்கு திட்டங்கள் அறியாத நெல்லை மாநகரம்

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள திருச்செந்தூர் சாலை ஒருவழிச்சாலை என்றாலும், இருவழிச்சாலை போல இந்த சாலையை மக்களில் சிலர் பயன்படுத்துகின்றனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பேருந்துகளே இயங்காத நிலையில், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஆச்சரியமளிக்கிறது. மேம்பாட்டு பணிகள் எதுவும் பல ஆண்டுகளாக நடைபெறாததும், விதிமீறல்களுமே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், அணுகு சாலைகள், புதிய வழித்தட உருவாக்கம் என, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், தென்தமிழகத்தின் முக்கிய மாநகரான திருநெல்வேலியில் மட்டும் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக உருப்படியான எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

பாளையங்கோட்டையையும் திருநெல்வேலியையும் இணைக்கும் ஒரேஒரு முக்கிய சாலையை மையமாக வைத்தே இங்கு போக்குவரத்து இருக்கிறது. குடியிருப்புகள், வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வெளிவட்ட சாலைகளை உருவாக்குவது, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்வது, போக்கு வரத்து விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை செயலாற்ற அரசுத்துறைகள் தவறியிருக்கின்றன. இதனால், மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

பாளையங்கோட்டை சமா தானபுரம் பகுதியில் தொடங்கி பாளையங்கோட்டை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை , மனக்காவலம் பிள்ளை சாலை, முருகன்குறிச்சியிலிருந்து வண்ணார்பேட்டை வரை செல்லும் சாலை, திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சுற்றிச் செல்லும் சாலைகள், திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் முதல் நெல்லையப்பர் கோயில் வரையிலான நெடுஞ்சாலை, சுவாமி நெல்லையப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் முதல் வாகையடி முனை, லாலா சத்திரமுக்கு, குற்றாலம் சாலை, டவுனிலிருந்து பேட்டை வழியாக சேரன்மகாதேவி செல்லும் சாலை வரையில் பகலில் எப்போதும் வாகன நெருக்கடி காணப்படுகிறது.

பேருந்துகள் இயங்காத நிலையில் வாகன நெருக்கடியில் திணறிய திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை.

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு பாலம் முதல் சுவாமி நெல்லையப்பர் கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள புரம் பகுதி மிகவும் இடநெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. குற்றாலம் சாலை மற்றும் டவுனிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையானது பேட்டை வழியாக செல்கிறது. மிகவும் குறுகலான பாதையாக இருப்பதால் இந்த பகுதி விபத்து மற்றும் வாகன நெருக்கடி ஏற்படும் இடமாக மாறியிருக்கிறது.

குழுவின் செயல்பாடு என்ன?

கரோனா ஊரடங்கில் வாகன போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடியிருந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் வழக்கம்போல வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையிலேயே முக்கிய சாலைகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுகிறது. ஒருவழிப்பாதையாக்கப்பட்டுள்ள சாலைகளிலும்கூட போக்குவரத்து விதிகளை மீறி இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருக்கின்றன. சாலை யோரங்களில் இஷ்டத்துக்கு வாகனங்களை நிறுத்தி வைப்பதும் தொடர்கிறது. குழாய்களை பதிக்க தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்க ப்படாமல் உள்ளதும் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.

திருநெல்வேலியில் போக்கு வரத்தை சீர்படுத்த காவல்துறை துணை ஆணையர் தலைமையில் ஒரு குழுவே செயல்படும் நிலையில், விதிமீறல்களும், செயற்கையான வாகன நெருக்கடியும் நீடிப்பது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x