Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

விவசாய நிலம் ஆக்கிரமிக்க முயற்சி: திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார்

விவசாய நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் புகார் அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள் (72). இவர், திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அம்மனுவில் கூறியிருப்பதாவது,

‘‘நாட்றாம்பள்ளி வட்டம், நாயனசெருவு பகுதியில் எனது கணவருக்கு சொந்தமான பூர்வீகவிவசாய நிலம் 2 ஏக்கர் உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் அந்த நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நிலத்தையொட்டி எனது வீடும் உள்ளது. இந்நிலை யில், நாயன செருவு பகுதியைச் சேர்ந்த கோபால் மகன்கள் மணி மற்றும் சண்முகம் ஆகியோர் ஒன்று சேர்ந்து எனது விவசாய நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். எனது நிலத்தின் வழியாக அவர்கள் நிலத்துக்கு செல்ல பாதை அமைக்கவும் முயற்சி எடுத்தனர்.

இதை நான் தட்டிக்கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நிலத்தை அவர்கள் பெயருக்கு எழுதி கொடுக்கா விட்டால், என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர்.

இது தொடர்பாக நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் சண்முகம், மணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, என்னை சமாதானமாக போகச்சொல்லி காவல் துறையினர் கூறுகின்றனர். நான் அளிக்கும் புகார் மனுவை வாங்கவே மறுக்கின்றனர். ஆகவே, எனது விவசாய நிலத்தை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்ற எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி மூதாட்டி அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை எஸ்பி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நாட்றாம்பள்ளி காவல் துறையினருக்கு உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x