Published : 23 Jun 2021 09:39 PM
Last Updated : 23 Jun 2021 09:39 PM

சேலம் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

போலீஸார் தாக்கியதில் மரணமடைந்த சேலம் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நேற்று (22.6.2021) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மலையாளபட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் அவர்களைத் தணிக்கை செய்துள்ளனர்.

அப்போது காவல் துறையினருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும், தகராறு ஏற்பட்டதன் விளைவாக, ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் என்பவர் மயக்கமடைந்து, சாலையில் விழுந்த நிலையில், அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து, பின்னர் ஆத்தூர் அரசு மருத்துமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக இன்று (23.6.2021) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர், முருகேசன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இத்துயரச் செய்தியை அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அன்னாரின் குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் காவல் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x