Last Updated : 23 Jun, 2021 08:15 PM

 

Published : 23 Jun 2021 08:15 PM
Last Updated : 23 Jun 2021 08:15 PM

மானாமதுரை அருகே ரூ.50 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகளுடன் தாய், தந்தை மீட்பு: இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரூ.50 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகளுடன் தாய், தந்தையை குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே பில்லூரைச் சேர்ந்த சங்கையா, காளீஸ்வரி தம்பதியினருக்கு குகன்ராஜ் (10), மகாலட்சுமி (8), சரவணன் (6), சந்தியா (1) ஆகிய 4 குழந்தைகள் உள்ளன.

குடும்ப வறுமை காரணமாக சங்கையா மானாமதுரை அருகே தீத்தான்குளத்தைச் சேர்ந்த குணசேகரனிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக அவரது சலவையகத்தில் சங்கையா, தனது மனைவி, குழந்தைகளுடன் கொத்தடிமையாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கரோனா சமயத்தில் சலவையகத்தில் வேலை இல்லாததால், தான் கொடுத்த கடன் தொகை ரூ.50 ஆயிரத்தை சிவகங்கை அருகே காட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த காந்தியிடம் பெற்றுக் கொண்டு, அவருடன் சங்கையா குடும்பத்தினரை குணசேகரன் அனுப்பி வைத்தார்.

காந்தியும், சங்கையா குடும்பத்தினரை சலவைத்தொழிலில் ஈடுபடுத்தி வந்தார். மேலும் ஊதியம் எதுவும் வழங்கவில்லை. இதனால் உணவிற்கே சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சங்கையாவிடம் கேட்காமலேயே அவரது 10 வயது மகன் குகன்ராஜை மானாமதுரை அருகே என்.நெடுங்குளத்தைச் சேர்ந்த சுப்ரமணியனிடம் செம்மறி ஆடு மேய்ககும் வேலையில் சேர்த்துள்ளார்.

மேலும் குகன்ராஜூக்கு 2 மாதங்களாக கொடுத்த ஊதியம் ரூ.8 ஆயிரத்தையும் காந்தி வாங்கி கொண்டாராம். இதனை அறிந்த குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர், கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகளுடன், சங்கையா, காளீஸ்வரியை மீட்டனர். சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், சங்கையா குடும்பத்தினரிடம் கொத்தடிமை மீட்புச் சான்றை வழங்கினார்.

இவர்கள் 6 பேரும் சிவகங்கை அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து கே.கே.பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமார் புகாரில் மானாமதுரை சிப்காட் போலீஸார் குணசேகரன், காந்தி, சுப்ரமணியன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து, காந்தி, சுப்ரமணியனை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x