சட்டப்பேரவையில் அரசைப் புகழ்ந்து தள்ளிய எதிர்க்கட்சியினர்

சட்டப்பேரவையில் அரசைப் புகழ்ந்து தள்ளிய எதிர்க்கட்சியினர்
Updated on
1 min read

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசைப் புகழ்ந்து தள்ளினர்.

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் 4 பேர் உள்ளனர். பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, பேரவையில் கொடுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். சபாநாயகர் உரையை நிறைவுசெய்யச் சொன்னார்.

அப்போது உரையை நீட்டிக்க வேண்டும், கூடுதல் நேரம் வேண்டும் என்பதற்காக முதல்வருடனான நட்பு பற்றிப் பேசிய அவர், எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு, பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் உள்ளதுபோல் (சந்திக்காமலேயே ஒருவர் மீது ஒருவர் தீவிர நட்பு பாராட்டியவர்கள்) என்று கூறி, நான் பேச கூடுதல் நேரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவையைக் கலகலப்பாக்கினார். பின்னர் அவருக்குச் சிறிது நேரம் கொடுக்கப்பட்டது.

இதேபோல் அவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் எய்ம்ஸ் அமைக்க முதல்வர் கோரிக்கை வைத்தது குறித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

இதேபோன்று பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் சமூக நீதிக்காக வைத்த கோரிக்கைகள், அவர் நிறைவேற்றியது உள்ளிட்ட பழைய சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசி சமூக நீதியின் பக்கம் திமுகவின் பங்களிப்பு குறித்தும், தற்போது முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் புகழ்ந்து பேசினார்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் காரசாரமாக இருக்கும் என்று பார்த்தால், ஆளுநர் உரை குறித்துப் பலரும் புகழ்ந்து பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் அதிக நேரம் எடுத்து அரசை விமர்சித்துப் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in