

அமைச்சர்கள் பதவியேற்பு விழா வரும் 27-ம் தேதி மதியம் புதுச்சேரியில் நடக்கிறது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கரோனா நிவாரணப் பொருட்களைச் சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
”தடுப்பூசியை முழுமையாகப் போட வேண்டும் என முயற்சி எடுக்கிறோம். தடுப்பூசித் திருவிழாவில் 94 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சுகாதாரத் துறையினர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டு துணி வாங்க வருவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி தருவதாக ஜவுளி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். டெல்டா, ஆல்பா என கரோனாவின் பல வகைகளாக இருந்தாலும், தடுப்பூசி போட்டிருப்பது அவசியம். நூறு சதவீதம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மூன்றாவது அலையில் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு தயாராக இருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை டெல்டா வைரஸ் பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை.
விமான நிலைய விரிவாக்கம் புதுச்சேரிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் பயன் தரும். மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தலாம். புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 30 சதவீதத்தினர் தமிழகத்தினர்தான். இக்கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் கூறியுயுள்ளேன். கரோனா நிவாரண நிதி முதல் தவணை நிறுத்தப்படவில்லை. அதில் சிலருக்குச் சென்றடையாதது தொடர்பாக அதிகாரியிடம் விசாரிக்கிறேன். ஆளுநருக்குக் கொடுத்துதான் பழக்கம். நிறுத்திப் பழக்கமில்லை. கரோனா நிவாரண நிதி தொடர்பான கோப்புக்கு ஒருசில நிமிடங்களில் அனுமதி தந்துள்ளேன்.
அமைச்சர்கள் பட்டியலை ஒப்புதலுக்காக உள்துறைக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் ஒப்புதல் பெற்று வரவேண்டும். வரும் 27-ம் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்கும்’’.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
அமைச்சர்கள் பெயர் விவரம் தொடர்பாகக் கேட்டதற்கு, "ஆண்டவருக்குத்தான் தெரியும். ஆண்டுகொண்டிருப்பவர் தந்துள்ளார். அங்கு ஆண்டுகொண்டு இருப்பவரிடம் ஒப்புதல் கிடைத்து வந்தவுடன் தெரிவிக்கப்படும்" என்று ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.