'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர்: மேட்டுப்பாளையம் அழைத்துவரப்பட்ட கும்கி யானைகள்

கோவை டாப்ஸ்லிப் முகாமில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இன்று அழைத்துவரப்பட்ட கும்கி யானை மாரியப்பன்.
கோவை டாப்ஸ்லிப் முகாமில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இன்று அழைத்துவரப்பட்ட கும்கி யானை மாரியப்பன்.
Updated on
1 min read

கோவை அருகே காட்டு யானையைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்தும் பணிக்காக கலீம், மாரியப்பன் ஆகிய இரு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையொன்று தனியே சுற்றி வருகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி சாலையைக் கடப்பதும், மனித நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் உலா வருவதும், தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் நீர் அருந்துவதும் இதன் தினசரி வாடிக்கையாகிவிட்டது. அதன் பெரிய உருவம் காரணமாக யானைக்கு, 'பாகுபலி' என்று அப்பகுதி மக்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், இயல்பான பழக்க வழக்கங்கள் இல்லாமல் மாதக்கணக்கில் ஒரே இடத்தில் முகாமிட்டு, மனிதர்கள் வாழும் பகுதியில் தனியே சுற்றி வரும் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்துப் பகுதியில் ரேடியோ காலர் பொருத்தத் தமிழகத் தலைமை வன உயிரினக் காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, இரவு, பகலாகக் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேடியோ காலர் பொருத்தும் இந்தப் பணிக்கு உதவுவதற்காக டாப்ஸ்லிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in